தமிழைப் போற்றுவோம் – தமிழ் இளையோர் அமைப்பு யேர்மனி

எமது அன்பிற்குரிய தமிழ் உறவுகளே உங்களுக்கு எமது எழுச்சிகரமான வணக்கத்தையும்,  சர்வதேச தாய்மொழிதின வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம். 

பெப்ரவரி 21.1952 இல் அன்றைய கிழக்கு பாகிஸ்தான் தலைநகர் தாக்காவில் வங்காள மொழியை அரசகரும மொழியாக்கக்கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின் போது உயிர்நீத்த நான்கு மாணவர்களின் நினைவாக சர்வதேச தாய்மொழித் தினம் உலகளாவிய முறையில் மொழி தொடர்பாக நினைவு கூறப்படும் சிறப்பு நாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாளானது யுனெஸ்கோ அமைப்பால் கடந்த 2000ம் ஆண்டு தொடக்கம் ஆண்டுதோறும் பெப்ரவரி 21ம் திகதி கொண்டாடப்படுகிறது.

பல்வேறு சமூகங்களின் மொழி பண்பாட்டுத்தன்மைகளை பேணுவதுடன் அவற்றுக்கிடையிலான ஒற்றுமையை உருவாக்கும் எண்ணத்தோடு யுனெஸ்கோ அமைப்பால் இந்தினம் கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் 6000 ற்கும் மேற்பட்ட மொழிகள்  பேசப்பட்டு வருகின்றது. இவற்றுள் 90 விழுக்காடு மொழிகள் 100000 ற்கும் குறைவான மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

இவற்றுள் 2500 ஆண்டுகளிற்கு மேல்  பழமை வாய்ந்த இலக்கண மரபைக் கொண்ட தமிழ் மொழியும் ஒன்றாகும். தமிழ் மொழியானது 9 கோடிக்கு மேற்பட்ட மக்களால் உலகம் முழுவதும் பேசப்பட்டு வருகின்றது. தமிழீழம், இலங்கை, சிங்கப்பூர் ஆகிய நாடுகளும் தமிழ்நாடுபுதுச்சேரி, அந்தமான் நிக்கோபார்  மாநிலங்களும் தமிழை ஆட்சி மொழியாக கொண்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட சிறுபான்மை மொழியாக தமிழ்  மலேசியாமொரிசியஸ்ரீயுனியன் போன்ற நாடுகளில் உள்ளது.

தமிழில் எழுதப்பட்ட அறத்தை கூறும் திருக்குறள், ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நாலடியார் போன்ற நூல்களும், நற்றிணை,  குறுந்தொகை,ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு ஆகிய எட்டுத்தொகை நூல்களும், ஐம்பெரும் காப்பியங்களான  சிலப்பதிகாரம்மணிமேகலைகுண்டலகேசிவளையாபதிசீவக சிந்தாமணி ஆகிய நூல்களும்,  ஐஞ்சிறு காப்பியங்களான உதயண குமார காவியம்நாக குமார காவியம்யசோதர காவியம்சூளாமணிநீலகேசி போன்ற ஒப்பற்ற நூல்கள் தமிழின் பழமைவாய்ந்த இலக்கண மரபுக்கு சான்றாகும்.

ஆராய்ச்சியாளர்கள் தமிழைப்பற்றி குறிப்பிடும்போது  சுமார்  20000  வருடங்களுக்கு முன்னர் தோன்றிய மொழியாகவும்,  ஹரப்பாமொகஞ்சதாரோசுமேரிய நாககரிகங்களுக்கு முன்னர் தமிழ்மொழி தோன்றியதாகவும் குறிப்பிடுகின்றனர். ஆராய்ச்சியாளரான அலெக்ஸ் கொல்லியர் (Alex Collier) தமிழைப்பற்றி குறிப்பிடும்போது உலகிலேயே மனிதனால் பேசப்பட்ட முதல் மொழி  தமிழென குறிப்பிடுகின்றார்.

The first language known to the humans is a language called „TAMIL“ spoken widely in the southern parts of India.                                                                               – Alex Collier

மொழிகளின் சிறப்புகளைக் கொண்டாடும் இன்றைய நாளில் இந்தி திணிப்பிற்கு எதிராக போராடி உயிர் நீத்த மொழிப்போர் தியகிகளிற்கு தமிழ் இளையோர் அமைப்பு யேர்மனி தனது வீரவணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறது. 

பல உயிர்களின் தியாகத்தினாலும், பல தமிழ் அறிஞர்களின் தியாகத்தாலும் காப்பற்றப்பட்ட தமிழ்மொழி இன்று அழிவை நோக்கி பயணிப்பதற்கு தமிழர்களாகிய நாமே காரணமாய் இருப்பது வேதனைக்குரிய விடயமாகும். தமிழ்மொழியை அழிவுப்பாதையில் இருந்து தடுப்பதற்கும், தமிழின் பண்பாட்டுத்தன்மையை பேணி பாதுகாப்பதற்கும் உங்கள் குழந்தைகளிற்கு தாய்மொழியை படிப்பிக்குமாறும், தமிழர்களிடம் தமிழில் உரையாடுமாறு தமிழ்  இளையோர் அமைப்பு -யேர்மனி உரிமையுடன் கேட்டுக்கொள்கிறது.

வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி

வாழிய வாழிய வே!

வான மளந்த தனைத்தும் அளந்திடும்

வண்மொழி வாழிய வே!

ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி

இசைகொண்டு வாழிய வே!

எங்கள் தமிழ்மொழி! எங்கள் தமிழ்மொழி!

என்றென்றும் வாழிய வே!

சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்

துலங்குக வையக மே!

தொல்லை வினை தரு தொல்லை யகன்று

சுடர்க தமிழ்நா டே!

வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி!

வாழ்க தமிழ்மொழி யே!

வானம் அறிந்த தனைத்தும் அறிந்து

வளர்மொழி வாழிய வே!

                               – மகாகவி சுப்ரமணிய பாரதியார்

நன்றி 

தமிழ் இளையோர் அமைப்பு யேர்மனி

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

About Author

Connect with Me:

Leave a Reply