தமிழ் மாணவர்களினதும் இளையோர்களினதும் தாயகச் சிந்தனைக்கான சிறந்த திசைகாட்டி பொன் சிவகுமாரன்

தமிழ்த் தேசிய இனமானது இழந்துவிட்ட தனது இறைமையை மீளவும் பெற்று, உலகிலே விடுதலை பெற்று சுதந்திரச் சிறகடிக்கும் பல்தேசிய இனங்களைப் போன்று எம்மினமும் வாழ்ந்துவிட வேண்டும் எனும் பேரு விருப்புடன் பயணித்துக் கொண்டிருக்கின்றது. தமிழ்த் தேசிய இனத்தின் நீதியும், நியாயமும், சத்தியமும் நிறைந்த இத் தியாகப் பயணத்தில் காலமகள் பிரசவித்துக் கையளித்த அற்புதக் கொடையாளர்களின் வரிசையில் மாவீரன் பொன் சிவகுமாரன் அவர்களும் முன்னிலை வகித்து வரலாற்றின் பதிவாகின்றார்.

பதினேளேவயது நிரம்பிய ஒரு மாணவப் பருவப் போராளியாக தூரநோக்குச் சிந்தனைகளைக் கோர்வையாக்கி, தமிழ்த் தேசிய இனவிடுதலை பற்றியும், அதிலும் குறிப்பாக ஒரு இனத்தின் இருப்பையும், ஆன்மாவையும் பிரதிபலிக்கின்ற தாய்மொழி மீதான காதலுடன், சமூகநீதிக்கான செயற்பாடுகளையும், சாதிய எதிர்ப்புப் போராட்டங்களையும் முன்னெடுத்ததுடன், இளையோரின் எண்ணங்களையும் தாய்மொழிமீது கவனம் கொள்ளச் செய்தார்.

தமிழீழ தேசத்தின் யாழ்ப்பாண மாவட்டத்தின், உரும்பிராயில் 26.08.1957ல் திரு.திருமதி. பொன்னுச்சாமி – அன்னலட்சுமி தம்பதியினருக்கு செல்ல மகனாகப் பிறந்த பொன். சிவகுமாரன் அவர்களை பெற்றோரும், உறவினரும், நண்பர்களும் “திரவியம்” எனச் செல்லமாகப் அழைத்தார்கள். யா / இந்துக் கல்லூரியின் துடிப்புள்ள மாணவனாய், அத்துடன் வீரமும், விவேகமும், நிறைந்த ஓர் மறைமுகப் போராளியாகவும் தன்னை உருவமைத்துக் கொண்டான்.

1971ல் தமிழ் மாணவர் பேரவையில் தன்னையும் ஒருவராக இணைத்துக் கொண்ட பொன். சிவகுமாரன் அவர்கள், தமிழ்மொழிமீது சிங்களம் திணித்து நின்ற கல்விச் சீர்திருத்த அமுலாக்கல்த் திட்டத்திற்கு எதிராக தமிழ் மாணவர்களை விழிப்படையச் செய்து, மாணவர்களின் தாயகச் சிந்தனைகளையும், தாய்மொழி மீதான தன்னார்வத்தையும் கூர்மையாக்க அயராது உழைத்தார்.

பொன். சிவகுமாரன் அவர்களின் தாய்மொழி மீதான பற்றுதலையும், கூர்மைப் பார்வைகொண்ட செயல் வீச்சுக்களையும் முளையிலேயே தடுத்துவிட வேண்டுமென எண்ணிய சிங்களம் அவரைச் சிறைப்பிடித்தது. 03 வருடங்கள் சிறைவைக்கப்பட்டதனால்

அவன் உணர்வுகள் மென்மேலும் உருதிகொண்டது, சிறை மீண்ட பின்னர் செயல் வீச்சுப் பன்மடங்காய் வியாபித்துக் கொண்டது.

தமிழீழ தேசியத் தலைவர் அவர்களுடன் நேரடியாக இனைந்து செயலாற்றும் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், அக்காலத் தலைமறைவுப் போராளியாக இருந்த லெப்டினன்ட் சங்கர் (சத்தியசீலன்) அவர்களுடன் தனது தொடர்புகளைப் பேணி, தன் இலட்சியம் தொடர்பாகவும் அவ் இலட்சியத்தை அடைவதற்காக கைக்கொள்ளும் தந்திரோபாய, மூலோபாயங்கள் தொடர்பாகவும், தன் இலட்சியத்திற்கு இடையூறாக செயற்பட்டு வரும் தேச விரோதிகள் தொடர்பாகவும் குறிப்பிட்டிருந்தார்.

தமிழ்த் தாயின் தவப்பேறாகப் பனி தொடர்ந்து விழிமூடிப்போன பொன். சிவகுமாரன் தொடர்பாக தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் தனது குறிப்பில் “விடுதலை உணர்வு மிக்க துணிச்சலும் கொண்ட ஒரு மகத்தான வீரனை இழந்து தமிழீழம் துயரில் ஆழ்ந்தது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

பொன். சிவகுமாரன் அவர்களின் தெளிந்த பார்வையும், நேர்கொண்ட செயல் வீச்சும், இளம் தலைமுறையினரை இலகுவில் ஈர்த்துக்கொண்டது. அவருடன் இணைந்து புரட்சிகரச் செயல் வீரர்கள் செயற்பட ஆரம்பித்தபோது, சிங்களம் தன் கவனத்தை சிவகுமாரன் மீது திருப்பியது. இருந்தபோதும், தன் இறுமாப்புத் தீராத செயல் வீரனாக வளம் வந்தான்.

10.01.1974 அன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற அனைத்துலகத் தமிழர் மாநாட்டை எவ்வாறாயினும் தடுத்துவிட வேண்டுமென சிங்களம் கருதியது. சிங்களத்தின் தீய எண்ணத்திற்கு அல்பிரட் துரையப்பா, போலிஸ் உதவி அத்தியட்சகர் சந்திரசேகரா ஆகியோர் உயிர்வடிவம் கொடுக்க முனைந்த்தபோதும், திட்டமிட்டபடி மகாநாடு நடைபெற்றது. ஆத்திரம் கொண்ட சிங்களம் போலீசாரை ஏவி, மாநாட்டில் கூடிய மக்கள்மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் 09 அப்பாவித் தமிழ் மக்கள் கொலை செய்யப்பட்டனர்.

இச் செயல் கண்டு ஆத்திரம் கொண்ட சிவகுமாரன் இதற்கு நாம் ஒரு பாடம் புகட்ட வேண்டும், முதலில் இதற்கு உடந்தையாக இருந்தோரை இல்லாதொழிக்க வேண்டுமென திடம் கொண்டார்.

இன்னும் ஒரு தடவை சிங்களத்திடம் தான் உயிருடன் பிடிபடக்கூடாது என்பதில் தெளிவாக இருப்பதன் அடையாளமாக, தன்னுடன் சயனைட் குப்பியையும் வைத்திருந்தபடியே துரோகிகள் மீதான தாக்குதல்களையும் முன்னெடுத்தார்.

துரோகிகள் மீதான தாக்குதல்கள் தோல்விகளில் முடிவடைந்தபோது சிவகுமாரனை தேடும் பணியை சிங்களம் தீவிரப்படுத்தியது.. தகவல் தருவோருக்கு பத்தாயிரம் சன்மானம் என பத்திரிகைகளில் விளம்பரம் செய்தது. 1974ம் ஆண்டிலேயே 700 பொலிசாரை பயன்படுத்தி உருப்பிராயை சுற்றிவளைத்து தேடினர்.

இதற்குப் பின்னரும் தாயகத்தில் இருப்பது பொருத்தமானதல்ல என சக தோழர்கள் குறிப்பிட்டபொது இந்தியா செல்வதற்கு தயாரானார். அக்காலப்பகுதியில் நிலவிய நிதி நெருக்கடியை ஈடு செய்வதற்காக கோப்பாயில் அமைந்திருந்த அரச வங்கியில் பணத்தை எடுப்பதற்கு சென்றவேளையில், பொலிசாரால் சுற்றிவளைக்கப்பட்டார்.

நண்பர்களை ஒவ்வொரு திசையிலும் சிதறி ஓடுமாறு கட்டளையிட்டு தானும் ஒரு திசையில் ஓடிய வேளை காலில் காயமடைந்து, ஓட முடியாத நிலையில் 05.06.1974 அன்று சயனைட் அருந்தி மாவீரனாய் தாய் மண்ணை முத்தமிட்டார்.

இவ் வீரனின் வீழ்ச்சி ஈடுசெய்ய முடியாத பெரும் இழப்பாகும். இவர் சாவடைந்த நாளையே தமிழீழ மாணவர் எழுச்சி நாளாக தமிழீழத் தேசிய தலைவர் அவர்களால் பிரகடனப்படுத்தப்பட்டது. வையகம் உள்ளவரை வாழும் இவன் நாமம் சுமந்து, தாயக விடியலுக்காய் உறுதி கொண்டு உழைப்போம்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

 

About Author

Connect with Me:

Leave a Reply