மக்களே மனிதநேயத்தை எடுத்துரைக்கும் செயற்பாடு

ஈழத்தமிழர்கள் கொத்து கொத்தாக கொன்றழிக்கப்பட்ட வேளையில் மனிதநேயமற்று பாராமுகமாக மௌனித்த சர்வதேச நாடுகளிடம், வலிகளை சுமந்த மக்களே மனிதநேயத்தை எடுத்துரைக்கும் வகையில் யேர்மனியில், வறுமையின் வலிகளில் துடிக்கும் வேற்றின மக்களுக்கு உதவிக்கரம் நீட்டினர். முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாட்களை மீள்நினைவுப் படுத்தும் வகையில் யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பினால் மால் நகரத்தில் இவ்வாறான மனிதநேய செயற்பாடு   நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது.

அத்தோடு கொல்லப்பட்ட தாயக உறவுகளை நினைவுகூரும் முகமாக மால் நகர தமிழ் மாணவர்கள் ஒருங்கிணைந்து சுடர்வணக்க நிகழ்வில் இணைந்ததும் குறிப்பிடத்தக்கது.

IMG-20170513-WA0002

IMG-20170513-WA0005

IMG-20170513-WA0006

IMG-20170513-WA0014

IMG-20170513-WA0001

ஆறாத வலிகள்

பேச்சை அடக்கினர்
மூச்சைப் பறித்தனர்
உரிமையை இழந்தோம்
சிரிப்பைத் தொலைத்தோம்
 
உயிரைக் காக்க வழியில்லை 
கரு கலைப்பில் முடிவில்லை
குழந்தையைத் தொலைத்து பித்தாகி
கணவனையும் இழந்த அனாதையானோம்

ஆக்கிறமிப்பாளனின் முட்கம்பிற்குள்
முடக்கப்பட்டோம்
பாதுகாப்புவளையம் என்று கூறி
வள்வளைப்பு செய்தான் மகிந்தன்

நேற்றைய கனவு இன்று கலைந்தது 
நாளைய விடியலும் இன்று சிதைந்தது 
மௌனிப்பால் தமிழினம் கலங்கியதன்று
உலகத் தமிழினம் மலைத்தே போனது

கணவனை காணாத ஏக்கம்
காவல் இல்லாத ஊர்
தூக்கமும் கெட்டது 
துயிலும் இல்லமும் சிதைந்தது

இதுவா நாம் கண்ட கனவு 
இதுவா எமது இலட்சியம் 
இறந்தவர்கள் யாரோ அல்ல 
எம் இன உறவுகள்

அனைத்தையும் இழந்தபின்
அமைதி காப்பது முறையோ?
பொங்கியல்லா எழவேண்டும்
மாவீரர்களது கனவு பலிக்க

புலம்பெயர்ந்து விட்டோம்
நாடு எதற்கு? 
என கேட்பவனின்
நாக்கை இழுத்தறு

விதையாகி வீழ்ந்தோரின் வீரப் போரினால் 
விடியலைத் தேடும் இளையோர் நாம்
கலைந்த கனவதை நிஜமாக்கி
அரசியற்போரினால் அகிலெங்கும் பறைசாட்டி
அமைத்திடுவோம் அண்ணனின் அழகிய தமிழீழம் 

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

 

ஒவ்வொரு மனிதனுக்கும் தாய்மொழி உண்டு – அதனைப் போற்றுவோம், பாதுகாப்போம் – தமிழ் இளையோர் அமைப்பு ஜேர்மனி

எமது அன்பிற்குரிய தமிழ் உறவுகளே உங்களுக்கு எமது எழுச்சிகரமான வணக்கத்தையும் உலகத் தாய்மொழிதின வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

உலகில் வாழும் இனத்தை அடையாளப்படுத்துவது அவர்களின் மொழி என்பதை நன்கு உணர்வோம். அப்படிபட்ட மொழியை எக்காரணம் கொண்டும் இழந்துவிடக்கூடாது. நாம் கற்கும் தாய்மொழியின் அடிப்படையிலே எமது நாகரிகம், சிந்திக்கும் முறை, கலை, கலாச்சாரம், இலக்கியம், பண்பாடு என்பன வளரும். ஆகவே ஒவ்வொரு குழந்தையும் தாய்மொழியைக் கற்கவேண்டும் என்றே உலகத் தாய்மொழி தினத்தின் நோக்கம். ஆதலால் இன்றைய உலகத் தாய்மொழி தினத்தில் எமது தாய்மொழியான தமிழைப் போற்றுவோம், வணங்குவோம்.

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்திற்கு முன்னே தோன்றிய மொழி தமிழ் என்று கூறப்படுகிறது. மொழிகளின் வகைகளில் தமிழ் ஒட்டுமொழியைச் சேரும். அதாவது வேர்ச்சொல்லுடன் இணைந்து வரும் இலக்கண உறுப்புகளால் ஒட்டுமொழி உருவாகின்றது. தமிழ் என்ற சொல் தம் இழ், தன்னிலிருந்து மலர்ந்து வரும் ஒலி, தம் மிழ் தகுதியான பேச்சு முறை என்பதை குறித்து நிற்கின்றது என்பதை அறிஞர் கமில் சுவேபில் கருதுகிறார். அதேபோல் வன்மையான ஓசையுடைய எழுத்துகள், மென்மையான ஓசையுடைய எழுத்துகள், இடைப்பட்ட ஓசையுடையவை என்பதை உணர்த்தும் வகையில் வல்லினம், மெல்லினம், இடையினம் என மெய் எழுத்துகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொன்றிலும் ஒரு எழுத்தை எடுத்தே தமிழ் என்ற சொல் அமைகின்றது (த-வல்லினம், மி-மெல்லினம், ழ்- இடையினம்).

தமிழில் இலக்கணம் மட்டும் சிறப்பின்றி இலக்கியமும் சிறப்பிடம் வகிக்கின்றது. வீரத்தைக் கூறும் நூலாகப் புறநானூறு, காதலைப் பற்றி கூற அகநானூறு, எமது வாழ்க்கையின் வழிகாட்டியாக நாலடியார், ஏலாதி, திரிகடுகம் என பல இலக்கிய பெருமைமிக்க நூல்கள் உள்ளன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தியது திருக்குறள். இதன் சிறப்பு என்னவெனில் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்படுள்ளது. அறவழியில் எவ்வாறு வாழ்வது என்பதை இந்நூல் கூறி நிற்கின்றது. அதேபோல் முன்னோர்களும் நாம் எவ்வாறு வாழவேண்டும், எதனைச் செய்யவேண்டும், எதனைத் தவிர்க்கவேண்டும் என்று கூறியவற்றை, பழமொழி என்னும் தலைப்பில் அடக்கியுள்ளனர்.

ஆராய்ச்சியாளர்கள் தமிழைப்பற்றி குறிப்பிடும்போது சுமார் 20000 வருடங்களுக்கு முன்னர் தோன்றிய மொழியாகவும், ஹரப்பா, மொகஞ்சதாரோ, சுமேரிய நாககரிகங்களுக்கு முன்னர் தமிழ்மொழி தோன்றியதாகவும் குறிப்பிடுகின்றனர். ஆராய்ச்சியாளரான அலெக்ஸ் கொல்லியர் (Alex Collier) தமிழைப்பற்றி குறிப்பிடும்போது உலகிலேயே மனிதனால் பேசப்பட்ட முதல் மொழி தமிழென குறிப்பிடுகின்றார்.

The first language known to the humans is a language called „TAMIL“ spoken widely in the southern parts of India.                                                                             – Alex Collier

இவை மட்டும் தமிழின் பெருமைகள் அல்ல. இன்னும் பல உள்ளன. இத்தனை பெருமைகளைக் கொண்ட எமது தமிழ்மொழியை நாம் அழியாது காக்கவேண்டும், ஆதலால் எமது இளந்தலைமுறையினர் ஏதேனும் முயற்சியில் தாய்மொழியைக் கற்று, தமிழர்களுடன் உரையாடி மொழியினை வளர்க்கவேண்டும். இனி வரும் சந்ததியினருக்கும் கொடுக்கவேண்டும்.

அதேவேளையில் இந்தி திணிப்பிற்கு எதிராக போராடி உயிர் நீத்த மொழிப்போர் தியகிகளிற்கு தமிழ்   இளையோர் அமைப்பு யேர்மனி இவ்வேளையில் தனது வீரவணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறது. எல்லோரும் இனத்தின் அடிப்படையிலே மொழிக்குப் பெயர் வைப்பார், ஆனால் மொழியின் அடிப்படையிலே ஒர் இனம் பெயர் பெற்றது என்றால், அது தமிழர்களே. எனவே ‘‘தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா!“.

வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி

வாழிய வாழிய வே!

வான மளந்த தனைத்தும் அளந்திடும்

வண்மொழி வாழிய வே!

ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி

இசைகொண்டு வாழிய வே!

எங்கள் தமிழ்மொழி! எங்கள் தமிழ்மொழி!

என்றென்றும் வாழிய வே!

சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்

துலங்குக வையக மே!

தொல்லை வினை தரு தொல்லை யகன்று

சுடர்க தமிழ்நா டே!

வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி!

வாழ்க தமிழ்மொழி யே!

வானம் அறிந்த தனைத்தும் அறிந்து

வளர்மொழி வாழிய வே!

– மகாகவி சுப்ரமணிய பாரதியார்


 

நன்றி
தமிழ் இளையோர் அமைப்பு ஜேர்மனி
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

2ம் லெப். மாலதியின் 28ம் ஆண்டு நினைவு நாளும் தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும்

எமது அன்பிற்கும் மதிப்பிற்குரிய தமிழீழ உறவுகளே! உங்கள் அனைவருக்கும்  தமிழ் இளையோர் அமைப்பு யேர்மனி தனது எழுச்சிகரமான வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கின்றது.

அக்டோபர் 10ம் நாளான இன்று உலகம் முழுவதும் பரவி வாழும் ஈழத்தமிழர்களினால்  தமிழீழ பெண்கள் எழுச்சி நாள் கொண்டாடப்படுகின்றது. இது 1987 அக்டோபர் 10 அன்று வீரகாவியமான 2ம் லெப். மாலதியின் நினைவாகவே கொண்டாடப்படுகின்றது.

உலகின் எந்தவொரு பகுதியில் யுத்தம் நடைபெற்றாலும் முதலில் பாதிக்கப்படுவது பெண்களே. அதேபோல்தான் தமிழீழத்தின் மீது சிங்கள பௌத்த பேரினவாத அரசுகளினால் மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்புகளினால் தமிழீழபெண்களும் பாதிக்கப்பட்டுவருகின்றார்கள். இவற்றிக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் முகமாகவும், பெண்களின்பாதுகாப்பிற்காகவும், சமுக கட்டமைப்புக்களை  காப்பதற்காகவும் தமிழீழ தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன்அவர்களால் பெண்கள் தமிழீழ விடுதலைப் போரில் இணைத்துக்கொள்ளப்பட்டார்கள்.

அவ்வாறே தன்னையும் தமிழீழ விடுதலைப்போரில் இணைத்துக்கொண்ட மன்னார் மாவட்டத்தை சேர்ந்த மாலதி எனப்படும் சகாயசீலி பேதுருப்பிள்ளை மண் விடுதலைக்கு மட்டுமல்லாது பெண் விடுதலைக்காகவும் போராடி வந்தார். 1987அக்டோபர் 10ம் திகதி கோப்பாயில் இந்திய இராணுவத்தினருக்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையில் இடம்பெற்ற நேரடிச்சமரில் 2ம் லெப். மாலதி வீரகாவியமானார். இவரே முதல் பெண் மாவீரராவர்.

இவரின் வீரமரணமானது ஆணாதிக்கத்தின் பிடியிலும், சமுகத்தின் பிடியிலும் சிக்குண்டிருந்த   தமிழீழ பெண்களிடம் பேரெழுச்சியை தோற்றுவித்திருந்தது.  இப்  பேரெழுச்சயானது  பெண்கள் தம்மை தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இணைத்துக்கொள்ள ஓர் ஊன்றுகோளாக அமைந்திருந்தது. போராட்டத்தில் இணைந்துகொண்ட பெண்கள் களத்தில் ஆண்போராளிகளுக்கு நிகராகவும் சமுதாயத்தில் பெண் விடுதலைக்காகவும் போராடி வாகை சூடினார்கள்.

ஆனால் தமிழீழ விடுதலைப்புலிகளினால் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட காலத்தின் பின்னர் அதாவது 2009ஆம் ஆண்டிற்கு பின்னர் தமிழீழ பெண்கள் சொல்லெனா துன்பங்களை  அனுபவித்து வருகின்றனர். இவற்றிக்கெல்லாம் ஒரே தீர்வு தமிழீழமாகும். காலமிட்ட கட்டளைப்படி வரலாறிட்ட வழியில் தமிழீழம் வெல்லும் வரை போராடுவோமென தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளான இன்று தமிழ் இளையோர் அமைப்பு யேர்மனி உறுதியெடுத்துக்கொள்கின்றது.

நன்றி  

தமிழ் இளையோர் அமைப்பு – யேர்மனி

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்

அனைத்துலக காணாமற்போனோர் நாள் – தமிழ் இளையோர் அமைப்பு – யேர்மனி

அனைத்துலக காணாமற்போனோர் நாளானது  உலகளாவிய ரீதியில் ஆண்டு தோறும்  ஆவணி மாதம் 30ம் திகதி கடைப்பிடிக்கப்பட்டுவருகின்றது. காணாமல் போனோர் என்பது ஒரு நாட்டினதோ ஒரு கண்டத்தினதோ இன்றி முழு உலகத்தையும் வாட்டும் பிரச்சனையாக உள்ளது. மனிதாபிமானம் சார்ந்து எத்தனையோ மனிதநேய அமைப்புக்கள் செயற்பட்டாலும் கூட இப்பிரச்சனைக்குத் தீர்வூகான முடியாதுள்ளது. உலகளவில் ஆதிக்க சக்திகளிடம் உறவுகளை பறிகொடுத்தோர்களுக்காய் வையக ரீதியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நாளாக  ஆவணி  30 அனைத்துலக காணாமற்போனோர் நாளாக கடைப்பிடிக்கப்பட்டுவருகின்றது. வட அமெரிக்காவிற்கும் தென் அமெரிக்காவிற்கும் இடையே உள்ள நாடான கொஸ்டாரிக்காவில் 1981 இல் தொடங்கப்பட்ட  கைதாகிக் காணாமற்போவோரின் உறவினர்களின் கூட்டமைப்பு (Federation of Associations for Relatives of the Detained-Disappeared, FEDEFAM) என்ற அரச சார்பற்ற அமைப்பே  முதன் முதலில்  லத்தீன் அமெரிக்காவில் இரகசியமான முறையில் கைது செய்யப்படுவதை எதிர்த்து குரலெழுப்பியது.

காணாமல் போனோர் பற்றிய ஆய்வுகளை  மேற்கொள்ளும் போது யுத்தங்கள் மாத்திரமன்றி  பாலியல் நோக்கத்திற்காகவும், விற்பனை நோக்கத்திற்காகவும் சிறுவர்கள் இளம் பெண்களைக் கடத்தல், பழிவாங்கும் நோக்கத்துடன் கடத்தல், கப்பம் பெறும் நோக்கத்துடன்  கடத்தல்,  உடல் உறுப்புக்களைத் திருடும் நோக்கத்துடன் கடத்தல் என பல நோக்கங்கள் முதன்மைப்படுத்தப்படுகின்றன.

முதலாம் உலக போரின் காலத்திலும்  இரண்டாம் உலக போரின் காலத்திலும்  மில்லியன் கணக்கானோர் காணாமல் போயுள்ளனர். இரண்டாம் உலக போரின் காலத்தில்  கிட்லரின் கொடூர நடவடிக்கையின் கரணமாக 10 லட்சத்துக்கு அதிகமான யூத இனத்தவர் மாத்திரம் காணாமல் போயுள்ளார்கள். 20ம் நூற்றாண்டின்  காலக்கட்டத்தில் காணாமற்போனோர் வரலாற்றில் முன்னைய காலங்களை விட அதிகமாகக் காணப்பட்டதாக கூறப்படுகின்றது.

 முக்கியமாக ஆசிய நாடுகளான சிறிலங்கா, இந்தியா, தாய்லாந்து, மியன்மார், மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆபிரிக்க நாடுகளில் சட்டவிரோத கைதுகள் கடத்தல்கள் காணாமல் போதல் என்பன பெரும் பிரச்சனையாகவே உள்ளது. அனைத்துலக மனித உரிமை அமைப்புகள் குறிப்பாக சர்வதேச மன்னிப்பு சபை,  மனித  உரிமை மீறல்களைக்  கையாள்வதற்காக உருவாக்கப்பட்ட ஐக்கிய நாடுகளின் சர்வதேச அமைப்பான மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் பன்னாட்டு மனிதாபிமான அமைப்பான சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறை இயக்கம் என்பன காணாமல் போனோருக்காக அதிக அக்கறை கொண்டு செயற்படுகின்றன.

இலங்கையிலும் கடந்த 30 ஆண்டு கால போர் காலங்களில்  சிறிலங்கா அரசானது தனக்கு எதிராக   செயற்படுவோர்களை கடத்தி காணாமல் போகடிக்கச் செய்தது. இதில் பத்திரிக்கையாளர்கள், மாணவர்கள், தமிழ் மக்களின் உரிமைகளுக்காக போராடியவர்கள் என அனைவரும் அடங்குவார். இது அனைத்தையும்  வெள்ளை வான் மூலம் செயற்படுத்திவந்தனர். இறுதி யுத்தத்தின் போதும் ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளார்கள். 2009ம் ஆண்டு நடைபெற்ற இனவழிப்பு போரின் போது மட்டும் 146679 பேருக்கு என்ன நடந்தது என மதிப்புக்குறிய  மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகை அவர்கள்  அனைத்துலக சமூகத்தை நோக்கி கேள்வியெழுப்பி வருகிறார்.  2011ம் ஆண்டு வெளியிடப்பட்ட காணாமல்  போனோர் நாடுகளின் பட்டியலில்  சிறிலங்கா  அரசு இரண்டாம் இடத்தை வகித்தது இது தமிழ் மக்களுக்கு எதிராக அரசு முன்னெடுக்கும் அநீதிகளை தெளிவாக  சுட்டிக்காட்டுகின்றது.

பல ஆண்டுகளாகியும் தமது பிள்ளைகள் எங்கே என்று தெரியாமல் கதறி அழும்  உறவுகள்  தான் எத்தனை? எத்தனை? தம் உறவுகளை இழந்து தவிக்கும் தவிப்பை உறவுகளை இழந்தவர்களால் தான் உணர முடியூம். 2009 ல் இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்காலில் இராணுவத்தால் கைது செய்யப்பட்டு காணாமல் போன தனது சகோதரனைத் தேடி செல்வி விபூசிகாவும் தாயும் எத்தனையோ இன்னல்களை அனுபவிப்பதை ஊடகங்கள் மூலமாக நாம் அறிவோம். காணாமல் போவோரை தேடுவோரும் காணாமல் போவதும் இலங்கையில் சர்வ சாதாரணமாகிவிட்டது.

காணாமல் போனவர் ஓர் குடும்பத்தலைவர் ஆயின் அக்குடும்பத்தின் பாதிப்பை  நினைவில் கொண்டு இத்தகைய குடும்பங்கள் மீது கவணம் செலுத்துவது எம் தலையான கடமையாகும். மனிதாபிமானம் இன்றி மக்கள் கடத்தப்பட்டாலும் நாம் மனிதபிமானத்துடன் செயல்படுவோம். காணாமல் போனோர் பட்டியல் தொடராது இருக்க எம்மாலான பணிகளைச் செய்வோம். காணமல் போகடிக்கப் பட்டவர்களை மீட்பதற்காகவும், அவர்களுக்காக போராடும் உறவினர்களுக்கு ஆதரவாக நிற்பதோடு, அவர்களுக்கான நீதியை பெறும் வரை  சர்வதேச சமுகத்திடம் தொடர்ந்தும் குரலெழுப்புவோம் என தமிழ் இளையோர்  அமைப்பு யேர்மனி உறுதியளித்துக்கொள்கிறது.

நன்றி

தமிழ் இளையோர் அமைப்பு – யேர்மனி
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

சிறிலங்கா நாடாளுமன்ற பொதுத்தேர்தலும் ஈழத்தமிழர்களின் தெரிவும்

சிறிலங்காவின் 15வது நாடாளுமன்றப் பொதுத்தேர்தல் எதிர்வரும் ஒகஸ்ட் 17ம் திகதி நடைபெறவுள்ளது. இவ்வேளையில் ஈழத்தமிழர்களின் தெரிவு யாராக இருக்க வேண்டும்?தாயகத்தில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகளில்  யாரை தெரிவு செய்வது எனும் கேள்வி வரும்பொழுது  எதிர்காலத்தை கருத்தில் கொண்டு   இத் தேர்தலில் ஈழத்தமிழர்களின் தெரிவு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியாகவே இருக்க  வேண்டும்.

இவ்வேளையில் ஏன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் தமிழர்களின் தெரிவாக இருக்க வேண்டும், இவர்கள் எவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடமிருந்து வேறுபடுகிறார்கள்  என்பதை பார்ப்பது முக்கியமாகிறது.

தாயகம், தேசியம்,  சுயநிர்ணய உரிமை ஆகிய கோட்பாடுகளை கொண்டு 2010ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இன்றுவரை அக்கொள்கையுடனே செயற்பட்டு வருகின்றது. தாயகத்திலும், சர்வதேசரீதியிலும் ஈழத்தமிழர்களின் உரிமைகளுக்காகவும், நடைபெற்றுக்கொண்டிருக்கும் இனப்படுகொலைக்கான நீதிக்காகவும், சர்வதேச விசாரணைக்காகவும்  தொடர்ந்து போராடி வருகின்றனர்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒப்பிடும்போது  தாயகம், சுயநிர்ணய உரிமை, தேசியம் ஆகிய கோட்பாடுகளை கொண்டு 2001ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளினால் ஆரம்பிக்கப்பட்டாலும், 2009ம் ஆண்டிற்குப் பிறகு அதாவது ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட காலப்பகுதிக்கு பிறகு அவை தேர்தல் கால கொள்கைகளாகவே உள்ளன. தேர்தல் காலங்களில் மட்டும் தமிழர்களின் தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை பற்றி பேசுபவர்களாகவும், தேர்தல் முடிந்த பிறகு தமிழர்களின் நலன்களுக்கு எதிராக தாயகத்திலும், சர்வதேசரீதியிலும் செயற்படுபவர்களாகவும் இருக்கின்றனர்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் விடுதலைப்புலிகளினால் ஆரம்பிக்கப்பட்டவர்கள் என்ற காரணத்தினாலேயே இதுவரையில் அதிகளவான வாக்குகளை பெற்று வருகிறார்கள். இவ் வேளையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் யாரால் ஆரம்பிக்கப்பட்டார்கள் என்பதை விட எதற்காக ஆரம்பிக்கப்பட்டார்கள் என்பதே முக்கியத்துவமாகிறது. ஈழத்தமிழர்களின்  நலன்களிற்காக ஜனநாயக வழியில் போராடும் சக்தியாகவே தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமிழீழ விடுதலைப்புலிகளினால் உருவாக்கப்பட்டது. ஆனால் ஈழத்தமிழர்களின் நலன்களிற்காகவும், உரிமைகளுக்காகவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு செயற்பட தவறிவிட்டது. எனவேதான் இவ்வேளையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி மாற்று சக்தியாக விளங்குகிறது.

ஈழத்தமிழர்களின் அபிலாசைகளை பிரதிபலிக்கும்  அரசியல் தலைமையை தேர்ந்தெடுப்பதின் மூலமாகவே எமது மக்களின் உரிமைக்கான போராட்டத்தை சர்வதேச சமூகத்திடம் கொண்டு போய் சேர்க்க முடியும். எனவேதான் மக்களே வருகின்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வெற்றி அத்தியாவசியமாகிறது.

எதிர்வரும் 15வது நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் ஐந்து தேர்தல் மாவட்டங்களிலும் சைக்கிள் (மிதிவண்டி) சின்னத்தில் தனித்துப் போட்டியிடும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினருக்கு  உங்கள் வாக்கினை வழங்கி வெற்றியடையச் செய்யுமாறு தமிழ் இளையோர் அமைப்பு  – யேர்மனி உரிமையுடன் கேட்டுக்கொள்கிறது. அத்துடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வெற்றியின் முக்கியத்துவத்தை தாயகத்தில் வாழும் எல்லா மக்களிடமும் கொண்டுபோய் சேர்க்கும் விதத்தில் செயற்படுமாறும், குறிப்பாக தாயகத்தில் வாழும் மாணவர்களை முன்னின்று செயற்படுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.


நன்றி
தமிழ் இளையோர் அமைப்பு – யேர்மனி
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

 

தமிழரது வரலாற்றில் இருண்ட மாதமான ஜூலை – தமிழ் இளையோர் அமைப்பு – யேர்மனி

எம் இனத்தின் ஆறாத வலிகளை சுமந்துகொண்டிருக்கும் எமது அன்பான தமிழ் உறவுகளுக்கு தமிழ் இளையோர் அமைப்பு – யேர்மனி புரட்சிகரமான வணக்கத்தை தெரிவித்துக்கொள்கின்றது. ஈழத்தமிழர்களின் வாழ்வில் அழியா வடுவாக பதிந்திருக்கும்  கறுப்பு   ஜூலை கலவரம் நடைபெற்று இன்றோடு 32 ஆண்டுகள் ஆகின்றன.

தமிழீழ விடுதலைப்புலிகள் யாழ்ப்பாணத்தில் திருநெல்வேலியில் ஸ்ரீலங்கா இராணுவவாகனத்தின்மீது தாக்குதலை நடத்தினர். இத்தாக்குதலில் பதின்மூன்று ஸ்ரீலங்கா  இராணுவத்தினர்  பலியாகினர். இத்தாக்குதல் 23ஆம் திகதி ஜூலை மாதம் 1983 நடத்தப்பட்டது. இதனை அறிந்த சிங்களவர்கள்  தமிழ்ர்கள் தான் இவ்வாறான தாக்குதலை நடத்தியிருக்க வேண்டும் என்ற காரணத்தை கூறி 24 ஆம் திகதி ஜூலை மாதம் 1983 இனக்கலவரத்தை மேற்கொண்டார்கள். இவ் இனக்கலவரம் இரண்டு கிழமைகள் நீடித்தது. சிங்கள இனவாதிகள் தமிழர்களை வீதியோரங்களில் சுட்டுக்கொல்வதும் தமிழர் சொத்துக்களை அழிப்பதும் பறிப்பதுமான செய்கைகளை செய்தனர்.  இதுவே முதல் கலவரம் இல்லை. இதற்கு முன்பே அதாவது 1956, 1958, 1961, 1974, 1977 ஆண்டுகளிலிருந்தே இனக்கலவரம் நடந்து வந்திருக்கின்றது.  எனவே ஜூலை மாதம் 1983இல் இடம்பெற்ற கலவரம்  திட்டமிட்டே நடாத்தப்பட்டது. இத்தாக்குதலிற்காக இதுவரையில் ஒருவர் கூட ஸ்ரீலங்கா அரசால் குற்றம்சாட்டப்பட்டு தண்டிக்கப்படவில்லை என்பதும்  குறிப்பிடத்தக்க விடயமாகும். எமது போராட்டமானது ஆயுதப்போராட்டமாக மாற 1983 ஆம் ஆண்டு நடைபெற்ற இனக்கலவரமே காரணமாகப் பார்க்கப்படுகிறது.

அன்று தொட்டு இன்று வரை எமது இனமானது திட்டமிட்ட முறையில் அழிக்கப்பட்டு வருகின்றது. தாயகத்தில் வாழும் மக்கள் எப்பொழுது  அவர்களது  உயிர் பறிபோகும் என்ற அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். சொந்த மண்ணில் சுதந்திரமாக வாழும் அனுமதி இல்லாத இனமாக வாழ்ந்து வருகின்றனர்.

கலவரத்தில் தமது உயிரை அர்பணித்த எமது உறவுகளை மறக்காது நினைவுகூர்வது எமது அன்றாட கடமையாகும். 83 ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை கலவரத்தில் உயிரிழந்த மக்களை நினைவுகூர்ந்து,  எமது இலக்கான தமிழீழம் வெல்லும் வரை எமது பணியை தொடர்வோம் என தமிழ் இளையோர் அமைப்பு – யேர்மனி உருதியெடுத்துக்கொள்கிறது.

நன்றி

தமிழ் இளையோர் அமைப்பு – யேர்மனி

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்